இரண்டில் ஒன்று

"நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்." சங்கீதம் 37:34



இந்த உலகப் பிரகாரமான வாழ்க்கையில் பயணிக்கின்ற நமக்கு முன்பாக இரண்டு வழிகள் வைக்கப்படுகின்றது

1. நித்திய வழி
2. மரண வழி

1. நித்திய வழி:

நித்திய வழி என்ன என்று பார்ப்போமானால் நாம் இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிக்கப்பட்டு அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுதல் ஆகும்.

"நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்." யோவான் 10:9

இயேசு கிறிஸ்துவின் வழியை நாம் பின்பற்றுவதினால் நமக்குக் கிடைக்கும் பலன் என்னவென்றால் உலகப் பிரகாரமான ஆசீர்வாதங்கள் மற்றும் பரலோக வாழ்வு.

" நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்;" எரேமியா 6 : 16


2. மரண வழி:
மரண வழி என்னவென்று பார்ப்போமானால் உலகத்தின் ஆசைகளிலும் அதின் இச்சைகளிலும் சிக்கிப் பாவமான வாழ்க்கை வாழ்வதே ஆகும்.

"மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்" நீதிமொழிகள் 14:12

நாம் இந்த வழியைப் பின்பற்றுவதினால் நமக்குக் கிடைக்கும் பலன் நிம்மதியின்மை மற்றும் மரணத்திற்குப் பிறகு எரிகின்ற அக்கினிக் கடலாகிய நரகம்.

"பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." ரோமர் 6 : 23

நாம் எந்த வழியைப் பின்பற்றிக் கொண்டு இருக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் . இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழியக் காலத்திலே இதனைத் தான் மக்களுக்குப் பிரசங்கித்தார்.

"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்." மத்தேயு 7 : 13,14

நாமும் நல்ல வழிகளிலே நடக்க முயற்சிப்போம் மற்றவர்களையும் நித்திய வழிக்குள்ளாக நடத்துவோம்.

"துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன் வழியைவிட்டுத்திரும்பாமற்போனால், அவன் தன் அக்கிரமத்திலே சாவான்; நீயோ உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்." எசேக்கியேல் 33:9

மாறாக நாம் இந்த உலகத்தின் காரியங்களும் வேண்டும் கிறிஸ்துவையும் பின்பற்ற வேண்டும் என்று ஜீவிப்போமானால் நாம் பரிதாபத்திற்கு உள்ளாவோம் .

சிந்தனை: நான் நித்திய வழியில் நடக்கின்றேனா? அல்லது மரண வழியில் நடக்கின்றேனா?

ஜெபம்:
இயெசு கிறிஸ்துவே நான் உம்மைப் பின்பற்றி நித்திய வழியிலே நடப்பதற்குக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்