"யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்" ஏசாயா 6 :8
நமது ஆண்டவராகிய கிறிஸ்து இன்று நம் ஒவ்வோருவரையும் பார்த்து யாரை நான் அனுப்புவேன் என்று கேட்கிறார். அன்று கால்டுவெல், மர்காஷியஸ், ராக்லேண்ட், சீகன் பால்க் போன்றவர்கள் தங்களுடைய உறவினர்கள் மற்றும் தங்களது சொந்தத் தேசங்களை விட்டு தியாகத்துடன் இங்கு வந்து கிறிஸ்துவின் அன்பை நமக்குக் கூறினார்கள். அதோடு மட்டும் இல்லாது நமக்குக் கல்விக்கூடங்கள் அமைத்து கல்வி அறிவையும் நமக்கு கொடுத்துள்ளார்கள். அதின்பயனாகத் தான் நாம் இன்று இந்திய தேசத்திலும் மற்றும் வெளிநாடுகளிலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகப் பல்வேறு நிலைகளில் உயர்ந்து நிற்கின்றோம்.
ஆனால் நமது இந்திய தேசத்தில் இன்னும் நாம் வாழுகின்ற தமிழகத்தில் கூட அநேகப் பகுதிகளில் வாழும் மக்கள் கிறிஸ்துவின் அன்பை அறியாமலும் கல்வி அறிவைப் பெறாமலும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பற்றி நாம் என்றைக்காவது சிந்தித்தது உண்டா?. ஒன்று நாம் கர்த்தருக்காகப் பணிபுரிவதற்கு நம்மை அர்ப்பணிப்போம் அல்லது அவர்களுக்காக மற்றும் அந்தப் பகுதிகளில் பணிபுரிபவர்களுக்காக நம்முடையப் பிரார்த்தனைகளை ஏறெடுப்போம். பிரார்த்தனைகளோடு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம். இல்லையென்றால் நியாயத்தீர்ப்பின் நாளிலே கர்த்தர் நம்மைப் பார்த்து பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார்.அப்பொழுது நாம் பரிதபிக்கப்பட்டவர்களாவோம். ஆண்டவரோ நம்மை நித்திய அக்கினிக் கடலாகிய நரகத்திற்கு நம்மை ஒப்புக் கொடுப்பார். சிந்திப்போம் செயல்படுவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
சிந்தனை: எனக்காகச் சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவுக்காக நான் என்ன செய்திருக்கிறேன்?
ஜெபம்: அன்பின் பிதாவே நான் என்னையே உம்மிடம் அர்ப்பணிக்கின்றேன். நான் உமக்காக ஊழியம் செய்ய என்னைப் பலப்படுத்தும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக