வேதபகுதி: மத்தேயு 7 : 1- 5
"நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்." மத்தேயு 7 : 1
ஒரு ஊரில் துறவி ஒருவர் ஒரு குடிசை ஒன்றைப் போட்டுக் கொண்டு அவரைப் பார்க்க வருகின்ற மக்களுக்கு அறிவுரைகள் கூறி வந்தார். அவரது குடிசைக்கு அருகில் ஒரு சிறிய வீடு ஒன்று இருந்தது. அந்த வீட்டில் ஒரு பெண் இருந்தார். அவர் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த துறவி காலையில் தனது குடிசையை விட்டு வெளியே வந்து உட்கார்ந்து விடுவார். அந்த வீட்டிற்கு விபசாரத்திற்கு எத்தனைப் பேர் வருகின்றார்கள் என்பதை எண்ணி அத்தனை அளவு சிறு கற்களை எடுத்து ஒரு மூலையில் போட்டார். நாளாக நாளாக அது ஒரு குவியலானது. துறவிக்கு இது ஒரு பொழுதுபோக்காகவே இருந்தது. துறவிக்கு வயதான காரணதினால் வியாதிப்பட்டார். இந்தத் துறவிக்கு வேலையே அந்தப் பெண்ணைப் பற்றிக் குறை சொல்வது தான். இடைப்பட்ட காலத்தில் அந்தப் பெண்ணும் தன்னுடையத் தவறுகளை எல்லாம் விட்டு விட்டு நல்லவராக வாழ்ந்தார். அந்தப் பெண்ணும் மரித்தார்.ஒரு சில நாட்களில் துறவியும் மரித்தும் விட்டார். ஊர்ப் பெரியவர்கள் கூடி அந்தத் துறவியை நல்ல முறையில் அடக்கம் செய்தனர். இருவரும் மோட்சத்திற்குச் செல்கின்றனர். இறைவன் அந்தப் பெண்ணிற்கு மோட்சத்தையும் துறவிக்கு நரகத்தையும் தீர்ப்பு எழுதினார். துறவி நான் என்னத் தவறு செய்தேன் நரத்திற்கு அனுப்புதற்கு என்று இறைவனிடம் கேட்டார். அதற்கு இறைவன் உனது வாழ்நாள் முழுவது இந்தப் பெண்ணைப் பற்றியே மற்றவர்களிடம் குறைகூறுவதிலேயே களித்தாய் ஆனால் இந்தப் பெண்ணோ தன்னுடையத் தவறுகளை உணர்ந்து திருந்தி வாழ்ந்தாள் என்று கூறினார்.
இது ஒரு வேடிக்கையான கதை தான் என்றாலும் நம்மில் அநேகர் இந்தத் துறவியைப் போலத்தான் மற்றவர்கள் செய்யும் சிறு தவறுகளையும் பெரிதுப்படுத்தி அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் நம்மில் உள்ளத் தவறுகளையெல்லாம் மறந்து அல்லது மறைத்துவிட்டு மற்றவர்களைக் குறைகூறுவதிலேயேக் காலந்தள்ளிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அவர்கள் தங்களுடையத் தவறுகளை விட்டு மனந்திரும்பி நியாயத்தீர்ப்பின் நாளிலே நித்தியத்திற்குப் பாத்திரவான்கள் ஆகிவிடுவார்கள். ஆனால் நாமோ அழிவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு விடப்படுவோம். மற்றவர்களைத் தீர்க்கின்ற நம்மைப் பார்த்துதான் ஆண்டவர் மாயக்காரனே என்று அழைக்கின்றார். மற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை.இந்த அதிகாரங்கள் தேவனுக்கு உரியது. நாம் நம்மில் உள்ளத் தவறுகளை இறைவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு பெறுவோம். மற்றவர்கள் தவறு செய்பவர்களாயிருந்தால் அவர்கள் மனம் மாறும் படியாக ஜெபிப்போம். தேவன் தாமே நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.ஆமேன்.
சிந்தனை: "நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது." 1 யோவான் 1 : 8
ஜெபம்: அன்பின் ஆண்டவரே நான் மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்காமலும் என்னை மற்றவர்கள் குற்றவாளியாகத் தீர்க்காமலும் இருக்க என்னில் நல் நடக்கையைத் தந்து வழிநடத்தும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக