நன்மை செய்

மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்;" மத்தேயு 7:12



இந்த வசனத்தை விளக்குவதற்கு ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நாம் வேலை பார்க்கின்ற அலுவலகத்திற்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் அல்லது உடன் ஊழியர்கள் ஆகியோரிடம் நாம் எப்படி நடந்துக் கொள்கின்றோம். ஆனால் நமது மேலதிகாரி நம்மிடம் கோபம் கொள்கின்ற போது நமக்கு அவர் மீது எவ்வளவு கோபம் வருகின்றது. இதைத் தானே நாமும் மற்றவர்களுக்குச் செய்கின்றோம் என்று நாம் நினைப்பதில்லை மாறாக அவர் நம்மிடம் காண்பித்தக் கோபத்தை மற்றவர்கள் மீது காட்டுகின்றோம். நாம் நம்மிடம் கூட வேலை பார்ப்பவர்களிடமும் வாடிக்கையாளர்களிடமும் அன்புடன் நடந்து கொண்டு நமது வேலையைச் சரியாகச் செய்யும் போது நமது மேலதிகாரியும் நம்மிடம் கோபம் கொள்ளாமல் நம்மைப் பாராட்டுவார் அல்லவா. நாம் மற்ற மனிதர்களிடம் அன்பு கூர்ந்து நற்காரியங்களைச் செய்யும் போது நம்மைப் பார்க்கின்ற மற்ற மனிதர்களும் நம்மிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள்.



இதனைத் தான் இயேசுகிறிஸ்துவும் தமது போதனையில் மற்ற மனிதர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டுமென்று நாம் விரும்புகின்றோமோ அதனையே நீங்களும் பிறருக்குச் செய்யுங்கள் என்று சொல்லுகின்றார். நமக்கு மற்ற மனிதர்கள் நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோமா அல்லது தீமை செய்ய விரும்புகின்றோமா. இவைகளின் காரணக் கருவியாக நம்முடையச் செயல்களே இருக்கின்றது . வள்ளுவரும் "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்" என்றக் குரளில் இதனைத்தான் வலியுருத்துகின்றார். நாம் மற்றவர்களுக்கு எப்படிச் செய்கின்றோமோ அப்படியே நமக்கும் செய்யப்படும்.




சிந்தனை: மற்றவர்களிடம் நாம் எப்படி நடந்துக் கொள்கின்றோம்?


ஜெபம்:
அன்பின் தேவனே நான் மற்ற மனிதர்களிடம் அன்புகூர்ந்து அவர்களுக்கு நன்மைகள் செய்து அதன் மூலம் உமது நாமத்தை மகிமைப்படுத்தக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்