செவிகொடுக்கும் தேவன்

"ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்." யோவான் 9: 31


ஒரு அலுவலகத்தில் அல்லது நிறுவனத்தில் வேலை பார்க்கின்றோம். நமது உயரதிகாரிகள் சொல்கின்றக் காரியங்களைச் செய்து முடிக்கும் போது நமது மேலதிகாரிகள் நம்மிடம் நன்மதிப்பு வைத்து இருப்பார்கள். நாம் நமது காரியங்களுக்காக அவர்களிடம் உதவி கேட்கும் போது அவர்கள் மறுக்காமல் தன்னால் ஆன உதவிகளைச் செய்வார்கள். நாம் நமக்கு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களை மதிக்காமல் நடப்போமென்றால் அதனுடைய எதிர்பலன் என்னவாக இருக்கும் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியதில்லை.



இப்படியாக நாமும் நமது தேவனுடைய சத்தத்தைக் கேட்டு அதின்படி நடக்கும் போது தேவனும் நாம் ஏறெடுக்கும் விண்ணப்பங்களுக்குப் பதிலளிப்பார். ஆனால் நாமோ அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுப்பதில்லை. நோவா தேவனின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்ததினால் அவரும் அவருடையக் குடும்பத்தினரும் உலகத்தின் அழிவினின்றுப் பேழையின் மூலமாகக் காப்பாற்றப்பட்டார்கள். ஆபிரகாம் தன்னுடையக் குமாரனாகிய ஈசாக்கைத் தேவன் பலியிடச் சொன்னபோது தேவனுக்குக் கீழ்ப்படிந்து தன்னுடையக் குமாரனைப் பலியிடச் சென்றதினால் விசுவாசிகளின் தகப்பன் என்றழைக்கப்படுகின்றார். சவுல் ராஜா தேவனுடையச் சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போனதினால் ராஜ்ஜியபாரம் சவுலின் குடும்பத்தை விட்டுத் தாவீதின் குடும்பத்தின் வசம் சென்றது, இப்படி வேதாகமத்தில் இருந்து உதாரணங்களைச் சொல்ல வேண்டுமென்றால் சொல்லிக் கொண்டேப் போகலாம். நாம் தேவனுடைய சத்தத்திற்குச் செவிகொடுப்போம் அவரும் நம்முடைய வேண்டுதல்கள் விருப்பங்கள் எல்லாவற்றையும் நன்மையாகச் செய்து முடிப்பார்.


சிந்தனை: நான் தேவனுடைய சத்தத்திற்குச் செவி கொடுத்து நடக்கின்றேனா?


ஜெபம்:
அன்பின் ஆண்டவரே நான் உம்முடையச் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கக் கிருபையும் பெலனும் தந்து வழி நடத்தும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்