யார் கண்ணில் உத்திரம்?

"நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?" மத்தேயு 7 : 3



அந்தக் கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்குப் பக்கத்து வீட்டிற்குப் புதிதாக ஒரு குடும்பம் குடியேறியது. இந்த வீட்டில் உள்ளப் பெண்மணி தங்களுடைய வீட்டின் கண்ணாடி ஜன்னலின் வழியாகப் பார்க்கின்றார். அங்கு அவர்கள் துவைத்துக் காயப் போட்டிருந்தத் துணிகளைப் பார்க்கும் போது எல்லாம் பழையத் துணிகளாகவும் அழுக்கு நிறைந்ததாகவும் இருந்தது. இந்தப் பெண்மணிக்கு அந்தக் குடும்பத்தின் மீது மிகவும் பரிதாபம் வந்தது. வருகின்ற கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அவர்கள் குடும்பத்தினருக்குப் புதியத் துணிகளை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையும் நெருங்கியது. கணவரிடம் தன்னுடைய விருப்பத்தைச் சொல்லுகின்றார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் மகன் அவனுடைய தாயைப் பார்த்து அம்மா நம்முடைய வீட்டு கண்ணாடி ஜன்னலில் உள்ள தூசியை முதலாவது சுத்தம் செய்யுங்கள் அதன் பிறகு அவர்கள் வீட்டில் காயப் போட்டிருக்கும் துணியைப் பாருங்கள் என்று கூறினான்.



ஆம் பிரியமானவர்களே நாமும் இப்படித்தான் நம்மில் அநேகப் பாவங்களையும் அக்கிரமங்களையும் அசுத்தங்களையும் வைத்துக் கொண்டு அவர் இப்படி இவர் அப்படி என்று மற்றவர்களைப் பார்த்துக் குறை கூறிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் நாம் குறைகூறும் நபர்களை விட நாம் அதிகமானக் குற்றங்களைச் செய்கின்றவராகவும் அசுத்தங்களை உடையவராகவும் வாழ்ந்து வருகின்றோம். முதலாவதாக நம்மில் உள்ளப் பாவங்களையும் அசுத்தங்களையும் களைந்து விட்டு இயேசு கிறிஸ்துவின் தூய இரத்ததினால் கழுவப்பட்டவர்களாக வாழுவோம். நம்மைச் சுற்றியிருக்கின்ற மனிதர்கள் தவறு செய்ப்பவர்களாக இருந்தால் மற்ற மனிதர்களிடம் கூறாமல் நேரடியாக அந்த மனிதரிடமே அவருடையத் தவறுகளைச் சுட்டிக் காட்டி அறிவுரை கூறுவோம் அவர்கள் மனந்திரும்பும்படி அவர்களுக்காக ஜெபிப்போம். நம்முடைய நல்ல நடத்தை அவர்களும் மாறுவதற்கு ஒரு தூண்டுகோலாக அமையும்.




சிந்தனை: என்னுடைய நடவடிக்கைகள் அனைத்தும் பரிசுத்தமானதாக இருக்கின்றதா?


ஜெபம்:
அன்பின் பிதாவே நான் பரிசுத்தமாக வாழ்ந்து அதன் மூலமாக மற்றவர்களை உம்மண்டை வழிநடத்தும் கருவியாகத் திகழ என்னைப் பெலப்படுத்தும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்