மதியம் வியாழன், 6 மார்ச், 2008

செவ்வைப்படுத்துபவர்

வேதபகுதி: ஏசாயா 45:1 - 6

"நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்."ஏசாயா 45:2


இந்தப் பகுதியில் கோரேஸ் ராஜாவைக் குறித்து ஏசாயா தீர்க்கன் மூலமாக நான் அவனை எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக உயர்த்தி, அவன் செய்கின்ற எல்லாக் காரியங்களிலும் உள்ள கோணலானவைகளை செவ்வைப்படுத்தி நேர்ப்படுத்துவேன் என்று கர்த்தர் கூறுகிறார். இந்தக் கோரேஸ் ராஜா இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைகளாக இருந்த பாபிலோன் தேசத்தை அரசாண்டவன். இந்தக் கோரேஸ் ராஜாவுக்கு அவன் அந்நிய ஜனத்திற்கு ராஜாவாயிருந்தாலும் கர்த்தர் அவனுக்கு இப்படிப்பட்ட ஆசிர்வாதங்களை எதற்காகக் கொடுத்தார் என்று பார்ப்போமானால்,கோரேஸ் ராஜா தான் அரசாளும் போது நேபுகாத்நேச்சாரால் இடிக்கப்பட்ட எருசலேமின் தேவாலயத்தைக் கட்டுவதற்குத் தன்னுடையக் கஜானாவிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தான். மேலும் அவன் நேபுகாத்நேச்சார் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து பாபிலோனுக்கு எடுத்துக் கொண்டு வந்தப் பொக்கிஷங்கள் எல்லாவற்றையும் கொடுத்து அனுப்பினான். மேலும் அடிமைகளாக இருந்த இஸ்ரவேல் ஜனங்களில் சிலரை எருசலேம் ஆலயத்தை எடுப்பித்துக் கட்டுவதற்காக அனுப்பினான்.


இப்படி கோரேஸ் செய்த நற்காரியங்கள் பல. எனவே தான் கர்த்தர் அவனைப் பார்த்து நான் உனக்கு முன்பாகக் கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் என்று உரைக்கிறார். நாமும் நம்மால் முடிந்த நற்காரியங்களைக் கிறிஸ்துவின் நாம மகிமைக்காகச் செய்வோமானால் நாம் செல்கின்றப் பாதையில், நம்முடைய குடும்ப வாழ்க்கையில், மேலும் நம்முடைய அலுவலகக் காரியங்களில் நமக்கு இருக்கின்றத் தடைகளை எல்லாம் அகற்றிக் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார், மாறாக நாம் கர்த்தருக்குப் பிரியமல்லாதக் காரியங்களையேச் செய்து வந்தோமானால் நம்முடைய வாழ்க்கையில் உள்ளத் தடைகள் தடைகளாகவே இருக்கும்




சிந்தனை: " தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப்போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்." மீகா 2 : 13

ஜெபம்:
கர்த்தாவே என்னுடைய வாழ்க்கையில் தடைகள் ஏதும் வராதபடி அதற்கு நான் உண்மையும் சாட்சியுமாய் நடக்கக் கிருபை தாரும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்