இரு மனம்

நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள்" 1 இராஜாக்கள் 18:21



நர்ஸ் ஒருவருக்கு வெளிநாட்டிற்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை இருந்து வந்தது. ஆனால் அவர்களுக்கு எல்லாக் காரியங்களும் தடைபட்டுக் கொண்டே வந்தது. நன்றாக ஆலயத்திற்கு வந்து ஜெபிக்கிற சகோதரி தான். அவர்களது விசுவாசம் தளர்ந்து கொண்டே போனது. அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பெண் இவரிடம் வந்து நீங்கள் ஒரு கோயில் இருக்கிறது அங்கு அர்ச்சனை செய்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற எல்லாத் தடைகளும் நீங்கி விடும் என்று சொன்னார்கள். இவர்கள் வேண்டாம் எங்களது ஆண்டவர் ஏற்றக் காலத்தில் எல்லாவற்றையும் செய்ய வல்லவர் என்று நிராகரித்தார்கள். அந்த புறமதத்தைச் சார்ந்த பெண்ணும் இவரை விடவில்லை. நீங்கள் வந்து அர்ச்சனை செய்ய வேண்டாம் என்னிடம் பணம் கொடுங்கள் நான் உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து வருகிறேன் என்று கூறினார்கள். இந்தச் சகோதரியும் என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம் என்று சொல்லி அந்தப் பெண்ணிடம் பணத்தைக் கொடுத்தார்கள். ஒரு சில நாட்களில் இவருக்கு வெளிநாடு செல்வதற்கு விசா கிடைத்தது. இவரும் வெளிநாடு சென்றார். சந்தோஷமாக விமானம் ஏறிச் சென்றார் ஆனால் அவருக்கு அங்குச் சென்ற பின் தான் மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது காரணம் இவருக்கு நர்ஸ் வேலை கிடைக்கவில்லை மாறாக வீட்டு வேலை தான் கிடைத்து இருந்தது.



ஆம் பிரியமானவர்களே நாமும் உலகக் காரியங்களினால் நம்மைக் கறைப்படுத்திக் கொண்டு வாழ்வோமானால் நமக்கும் இந்தச் சகோதரிக்கு ஏற்பட்ட நிலைமை தான் நமக்கும் ஏற்படும். அவர் வெளிநாடு சென்ற பின் தான் தமது தவறை உணர்ந்தார். கண்ணீர் விட்டார் ஆனால் பயன் ஒன்றுமில்லை. நாமும் இப்படித்தான் "ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்" என்ற பழமொழியைப் போல கிறிஸ்துவும் வேண்டும் உலகக் காரியங்களும் வேண்டும் என்று அலைவோமானால் கர்த்தர் நம்மைக் கைவிட்டுவிடுவார் நாமும் நடு ஆற்றிலே தான் விழ வேண்டியதாயிருக்கும்.



இஸ்ரவேல் ஜனங்கள் பாகால்களைச் சேவிக்கும் போது ஆண்டவர் அவர்களைக் கைவிட்டார். அது போல நாமும் உலகத்தையும் அதின் காரியங்களையும் இச்சித்துச் சேவிப்போமானால் நமக்கும் அழிவு தான் நேரிடும். நமது தனிப்பட்ட வாழ்விலும் குடும்ப வாழ்விலும் ஆசிர்வாதக் குறைவு ஏற்படும்.




சிந்தனை: "தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்." யாக்கோபு 4:8


ஜெபம்:
அன்புள்ள இறைவா நான் உலகத்தின் காரியங்களைப் பின்பற்றாமல் உம்மை மட்டுமே பின்பற்ற உதவி புரியும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்