மதியம் வெள்ளி, 29 பிப்ரவரி, 2008

ஒப்புக் கொடுத்தல்

"உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்" சங்கீதம் 37 : 5



எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு வேடிக்கையானக் கதை.ஒரு சிறுவன் அவனுடைய தாயாரிடம் அவன் பிறந்தநாளுக்கு அவனுக்கு விளையாட்டு பைக் ஒன்று வாங்கித் தரும்படிக் கேட்டான். அதற்கு அவனுடையத் தாயார் நீ இந்த வருடத்தில் நடந்து கொண்டவைகளையெல்லாம் கடவுளுக்குக் கடிதமாக எழுது அவர் உனக்கு பைக் கிடைக்கச் செய்வார் என்று கூறினார்கள். அவனும் தனது அறைக்குச் சென்றான். நான் நல்லபையன் எனக்கு ஒரு பைக் தாருங்கள் என்று எழுதினான். அவன் நன்றாகச் சேட்டை செய்யக்கூடியப் பையன் என்பதால் அவனுக்கு அந்தக் கடிதத்தில் திருப்தி இல்லாததால் அதைக் கிழித்துப் போட்டான். பின்னர் நான் கெட்டப் பையனாக நடந்து கொண்டேன் எனக்கு பைக் தந்தால் நான் நல்லப் பையனாக நடந்து கொள்வேன் என்று எழுதினான். தான் நல்ல பையனாக நடக்கவில்லை எனவேக் கடவுள் நமக்கு பைக் தரமாட்டார் என்று எண்ணி அந்தக் கடிதத்தைக் கிழித்து விட்டு ஆலயத்தை நோக்கிச் சென்றான். அவனுடையத் தாயாரும் நாம் நினைத்தது நடந்து விட்டது நமது பையன் திருந்தி விடுவான் என்று நினைத்தார். ஆலயத்திற்குச் சென்றவன் அங்கு உள்ளச் சிலுவையை எடுத்துக் கொண்டுத் தனது வீட்டிற்கு வந்து ஆண்டவரே உமது சிலுவையை நான் எடுத்து வைத்துள்ளேன் உமக்குவேண்டுமானால் எனக்கு பைக் கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்ளவும் என்று எழுதினான்.



வேடிக்கையானக் கதை என்றாலும் நாமும் இப்படித்தான் பலவேளைகளில் இறைவனிடம் நீர் எனக்கு இந்தக் காரியத்தை வாய்க்கப் பண்ணினால் நான் இதைச் செய்கிறேன் அதைச் செய்கிறேன் என்று ஜெபிக்கிறோம். ஆனால் நாம் கர்த்தருக்கு நம்மை அர்ப்பணித்து விட்டு நாம் செயல்படுவோமானால் நாம் கேட்காத ஆசீர்வாதங்களையும் நமக்குத் தந்தருளுவார். ஆனால் நாம் கர்த்தரைக் கட்டாயப்படுத்தி எனக்கு இந்தக் காரியம் கண்டிப்பாகக் கிடைக்கவேண்டும் என்று ஜெபிப்போமானால் நமக்கு அந்தக் காரியம் கிடைத்தாலும் ஒரு முழுமையான ஒன்றாக இருக்காது. நாம் நம்மைக் கர்த்தருடையக் கைகளில் ஒப்புக் கொடுக்கும் போது அவரே நம்முடைய எல்லாக் காரியங்களையும் பார்த்துக் கொள்ளுவார். நாம் எதற்காகவும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.





சிந்தனை: நான் என்னுடைய சுய இஷ்டப்படி நடக்கிறேனா? அல்லது கர்த்தருடையக் கரத்தில் ஒப்புவித்து அவருக்கு விருப்பமாய் நடக்கிறேனா?


ஜெபம்:
தேவனே நான் என்னுடைய சித்தத்தின்படி அல்ல உம்முடையச் சித்தத்தின்படிச் செயல்பட அருள் தாரும். ஆமேன்.