வேதபகுதி:மீகா 7:19
அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்கள் பாவத்தை அறிக்கையிட்டு, மனந்திரும்பி ஆண்டவருக்கு உங்கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்து விட்டீர்களா? 1 யோவான் 1 :9ன் படி நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு தேவன் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். பாவத்தை மன்னிக்கிறார், பாவத்தை நீக்குகிறார், நம்மைப் பரிசுத்தமாக்குகிறார். ஏசாயா 43:25, ஏசாயா 38:17ன் படி பாவங்களை குலைத்துப் போட்டு மறந்து விடுகிறவர், மற்றும் முதுகுக்குப் பின்னாக எறிந்துவிடுபவர்.
ஆனால் நாமோ சில நேரங்களில் சிறு பிராயத்தில் அல்லது வாலிபப் பிராயத்தில் அல்லது மாறுபட்ட சூழ்நிலைகளில் செய்த பழைய பாவங்களை நினைத்து குற்ற மனசாட்சி அடைந்து சமாதானத்தை இழந்து போகிற சூழ்நிலைகளுக்குச் சாத்தானால் தள்ளப்படுகிறோம். நமது பாவங்களைத் தேவன் பார்க்கக் கூடாத, போகமுடியாத தூரமான இடத்தில் சமுத்திர ஆழத்தில் போட்டபின் நாம் ஏன் மீண்டும் மீண்டும் கிளறிப் பார்க்கிறோம்?. நம்முடைய தேவன் மன்னித்தவுடனே மறந்து விடுகிறார். நாம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறோம்.
சிந்தனை: குற்றங்களையெல்லாம் மன்னிக்கிறார், நோய்களை குணமாக்கி நடத்துகிறார். அவர் செய்த சகல உபகாரங்களை நீ ஒரு நாளும் மறவாதே. ஒருபோதும் மறவாதே.
ஜெபம்: பாவத்தைப் பாராத சுத்தக்கண்ணரே, என் பாவங்களை அகற்றி, பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக