மதியம் புதன், 7 நவம்பர், 2007

இப்படிச் செய்வதே பிரியம்

வேதபகுதி:ஆமோஸ் 4 : 4 - 5


கில்காலுக்கும் போய் துரோகத்தைப் பெருகப்பண்ணி பலிகளையும் தசமபாகங்களையும் செலுத்தி... வசனம் 4.



சிறு பிள்ளைகள் இனிப்புப் பண்டங்களையே அதிகமாக விரும்புகின்றனர். காரமான, புளிப்பான, துவர்ப்பான பொருட்களை வெறுத்துவிடுகின்றனர். சாக்லேட் என்றால் அவர்களுக்குக் கொள்ளைப் பிரியம். அதை உண்டு சிறுவயதிலேயே பற்களில் சொத்தை வந்து இளவயதிலேயே பற்களை இழந்து விடுகிறார்கள்.



இது போன்றே இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கு விருப்பமான பாவச் செயல்கள் பலவற்றைச் செய்து கொண்டே வந்தார்கள். அது அவர்களை அழிவுக்கு நேராக வழி நடத்திவிடும் என்று தேவன் பல்வேறு தீர்க்கதரிசிகள் மூலமாக எச்சரித்தும் அவர்களுக்கு அதை விட்டுவிட மனதில்லை. ஆகவே தான் ஆண்டவர் சொல்லுகிறார் இப்படிச் செய்வதே இஸ்ரவேலருக்குப் பிரியமாயிருக்கிறது என்று அவர்கள் மனக்கடினத்தினிமித்தம் எச்சரிக்கிறார்.



வாலிபர்கள் பீடி, சிகரெட், மது, பான்பராக், போதைப் பொருட்கள் போன்ற பொருட்களை அந்த பொருட்களின் லேபிளில் " இந்தப் பொருள் உடல் நலத்திற்குக் கேடு " என்றுப் போட்டிருந்தாலும் அவர்கள் அதைப்பிரியமாய்ப் பயன்படுத்துகிறார்கள். இது அவர்களுக்கு அழிவு ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தாலும் அதைப் பிரியமாய்ப் பயன்படுத்துகிறார்கள். முடிவில் புற்று நோய் வந்து, நுரையீரல் போன்ற உடல் உறுப்புகள் கெட்டுப் போனபின்பு வருந்துகிறார்கள். அதன் பின்பு ஐயோ போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணிணதே என்று புலம்பவேண்டியதாயிருக்கும்.




நமக்குப் பிரியமானப் பாவப்பழக்கங்கள் போன்ற தீயக் காரியங்களுக்கு யோசேப்பைப் போல விலகி ஒட இன்றைக்கே நாம் தீர்மானம் எடுப்போம். அப்பொழுது கர்த்தர் நம்மை அதிகமாய் ஆசிர்வதிப்பார். நமது எதிர்காலம் மிகவும் ஆசிர்வாதமாக இருக்கும்.




சிந்தனை: பாவம் பூரணமாகும் போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.


ஜெபம்: தேவனே இவ்வுலகத்தின் பாவத்திற்கு விலகி ஓட உம்முடைய தூயக் கிருபையைத் தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்